நேற்று முன்தினம் (08.05.2021) திருச்சி பிரணவ் ஜுவல்லரியிலிருந்து அதன் உரிமையாளர், மதன் மார்டின் என்ற தன்னுடைய ஊழியரிடம் 5 கோடி ரூபாய் பணம் கொடுத்து சென்னையில் புதிய நகைகளை வாங்க தனி கார் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், நேற்று காலை திருச்சி வந்து சேர வேண்டிய நிலையில், நேற்று இரவுவரை அவர் திரும்பி வராததால் நகைக்கடை நிர்வாகம் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணையைத் துவங்கிய காவல்துறை, மார்ட்டினின் செல்ஃபோன் இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தை சைபர் செல் மூலம் கண்டறிய முயற்சி செய்த நிலையில், தொழுதூர் அருகே அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தொழுதூர் விரைந்த காவல்துறை, அங்கிருந்து தம்முடைய விசாரணையைத் துவங்கினர். முதல் கட்ட விசாரணை செய்ததில், கார் ஓட்டுநர் தன்னுடைய நண்பர்களுக்கு ஃபோன் செய்து வழியில் அவர்களை ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது. வரும்போது மார்ட்டினை கொலை செய்து அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்ததோடு, அவரை மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு புதருக்குள் புதைத்து வைத்துள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று கார் ஓட்டுநரோடு காவல்துறை மண்ணச்சநல்லூர் பகுதிக்கு உடலை தோண்டி எடுக்கச் சென்றுள்ளனர்.