தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீட்டுக்குள் புகுந்து ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் அப்பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இந்த தம்பதிக்கு, 7 வயதில் ரித்தீஷ் என்கிற மகனும், ஒன்றரை வயதில் சாதனா என்கிற மகளும் இருக்கின்றனர். சங்கர் கணேஷ், சென்னையில் பணியாற்றி வரும் நிலையில், மனைவி ராமலட்சுமி தன் குழந்தைகளுடன் கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு, ராமலட்சுமி வழக்கம் போல் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு, தன் குழந்தைகளுடன் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில், கதவை திறக்கும் சத்தம் கேட்ட ராமலட்சுமி, திடீரென விழித்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை உடைக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராமலட்சுமி கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த கொள்ளையர்கள், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து, அவரிடமிருந்து 3.5 பவுன் தங்கநகை மற்றும் 5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
அந்த சமயத்தில், என்ன செய்வது என தெரியாமல் இருந்த ராமலட்சுமி, பின்னர் ஊர்மக்களை அழைத்துக்கொண்டு சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராமலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.