சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கி கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் என தந்தை, மகன் இருவரையும் தூத்துக்குடி சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் கோவில்பட்டி கிளைச் சிறையிலிருந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தனர். இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில் கடந்த ஆண்டு ஜெயராஜ் மனைவி மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், 'எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்' என தெரிவித்தனர். மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணை விரைவுபடுத்த வேண்டும்' என தெரிவித்தனர்.
இந்தநிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு வரும் ஐந்து மாதம் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக் கோரி மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். எனவே நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. அதனால் தான் தாமதம் ஆகிறது. இன்னும் எட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளன. எனவே இரண்டு முதல் நான்கு மாதங்கள் தேவைப்படுகிறது' என தெரிவித்தனர். இதனை பதிவு செய்துகொண்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி நியமிக்கப்படும் நாளிலிருந்து மூன்று மாத காலத்தில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.