கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை புதுக்கோட்டையில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் தம்பிதுரை அங்கு செல்லாமல் கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி தான் என்பதால் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர் கூட்டம் மாலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய தம்பிதுரை.. இந்த ஆட்சியையும் கட்சி சின்னத்தையும் காப்பாற்றுவது நமது கடமை. இங்கு நான் வேட்பாளர் இல்லை. நீங்கள் தான் வேட்பாளர். மத்தியில் மோடி தான் நல்லாட்சியை தர முடியும், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நிறுத்தப்படுகிறது. ஆனால் உண்மையான காங்கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் தான். அந்த தமிழ் மாநில காங்கிரஸ் நமது கூட்டணியில் உள்ளது, மக்கள் நலன் கருதி தான் இந்த கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் தமிழ் இனத்தையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் கொலை செய்தது. எனவே திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும் போது.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம், அவர்கள் மேற்கொண்ட வழக்கு நடவடிக்கைகளே ஜெயலலிதாவின் உடல்நிலையை பாதிக்க செய்தது. திமுக வெற்றி பெற்றால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு காரணமே திமுகவும் காங்கிரசும் தான். அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பது நாங்களே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.
ஆனால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு காரணம் சசிகலா குடும்பம் தான் என்று க்குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில் தம்பிதுரை திமுக காங்கிரஸ் தான் காரணம் என்று கூறியிருப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.