அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது திரிக்கப்பட்டுப் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி என இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே சனாதன பிரச்சனையை திமுக கையில் எடுத்துள்ளதாக ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயகுமார், “தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே சனாதனத்தை திமுக கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் வகையில் உள்ளது. இப்படி நிறையப் பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகளோ ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் அரசு அமைந்த பிறகுதான் சமத்துவமே வந்தது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொதுத் தொகுதியில் நிற்கவைத்து வெற்றி பெற்றது ஜெயலலிதா தான். தமிழகத்தில் இருக்கும் அனைத்து சாதியினருக்கும் தாலிக்குத் தங்கம் போன்ற பல்வேறு திட்டங்களைச் செய்திருக்கிறார். தமிழகத்தில் நீதிமன்றம் சென்று 69 சதவீத இடஓதுக்கீட்டை கொண்டுவந்தார்” என்று பேசினார்.