சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாகத் தீவிர அரசியலில் ஈடுபட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். தன்னை அதிமுக பொதுச்செயலாளராகத் தொடர்ந்து அவர் அடையாளப்படுத்தி வந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி சசிகலாவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்த நிலையில், மதுரையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திடம் சசிகலா மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், " சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம்" எனத் தெரிவித்தார். அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் மாறுபட்ட கருத்தைக் கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சசிகலா தொடர்பான அனைத்து செய்திகளுக்கும் முதல் ஆளாகக் கருத்து கூறும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுதொடர்பாக கூறும்போது, " சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்து தர்மயுத்தம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலாவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று போர்க்கொடி தூக்கியவர் அவர். ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டியை முழுமையாகப் பார்த்துவிட்டுத்தான் கருத்து தெரிவிக்கிறேன்" என்றார்.