திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் ஜனவரி 22ந் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு வருவாய்த்துறை கண்காணிப்பில் காவல்துறை பாதுகாப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அக்கிராமத்தை சுற்றியுள்ள சில கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான காளைகள் கலந்துக்கொண்டன.
சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமன் என்பவரின் காளைமாடு, ஜல்லிக்கட்டில் கலந்துக்கொண்டது. இதனை வீரர்களால் பிடிக்க முடியவில்லை. மைதானத்தை விட்டு ஓடியது காளை. இந்நிலையில் இந்த காளை அருகில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த காளையை கிணற்றில் இருந்து காளையின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்டு அடக்கம் செய்துள்ளனர்.
அந்த காளை கிணற்றில் தவறி விழுந்ததை அறிந்த வருவாய்த்துறையினர் இதுப்பற்றி காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலையத்தில், போட்டி நடத்திய நிர்வாகிகள் பூபாலன், சங்கர் மற்றும் பழனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் அவர்கள் அதிர்ச்சியாகினர். ஊருக்காக தானே விழா நடத்தினோம் இப்போ பாருங்க, எங்கள் மீது வழக்குபதிவு செய்துயிருக்காங்க எனச்சொல்ல இதனை கண்டித்து வாணியம்பாடி ஆலங்காயம் சாலையில், அக்கிராமத்தினர் ஜனவரி 23ந் தேதி காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு சாலையில் கற்களை உடைத்து எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியல் செய்த மக்களை சமாதானம் செய்து மறியலை கைவிட வைத்தனர்.
மைதானத்தில் எதுவும் நடக்கவில்லை, மைதானத்தில் அசம்பாவிதம் நடந்திருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ளலாம். இது மைதானத்துக்கு வெளியே நடைபெற்றது. இதற்கு போட்டி நடத்திய நாங்கள் எப்படி காரணமாக முடியும் என கேள்வி எழுப்பியுன்னர் அதிகாரிகளிடம். தற்போது இது தொடர்பாக காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.