கோவில்பட்டியில் நடந்த வழிப்பறி வழக்கில் முன்னாள் போலீஸ்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் காவேரி மணியன் (33) கடந்த 2003ம் ஆண்டு இவர் தமிழக காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்த வந்தார்.
இந்நிலையில், கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர் செல்வி ஆகியோர் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது வாகனச் சோதனை என்று அவர்களை வழிமறித்து, 2 பவுன் மோதிரம் மற்றும் 2 கிராம் செயின் ஆகியவற்றை போலீஸ்காரர் காவேரி மணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து பறித்துள்ளார்.
இதில் செந்தில்குமாரும் செல்வியும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து காவேரி மனியனை சுற்றிவளைத்து பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
இதேபோல், கழுகுமலையில் இருந்து இருக்கன்குடி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்களிடம் 11.5 பவுன் நகை பறித்தது மற்றும் கோவில்பட்டி தனியார் நகைக்கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த கயத்தாறு சேர்ந்த முருகானந்தத்தை அரிவாளை காண்பித்து மிரட்டி ஒரு பவுன் மோதிரத்தை பறித்தது ஆகிய புகார்கள் தொடர்பாக காவேரி மணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளிகளான வெங்கடேஷ், கணேசன், சுடலை, மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்குகள் கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் காவலர் காவேரி மணியன் பணி நீக்கமும் செய்யப்பட்டார். இந்த 3 வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், செந்தில்குமார், செல்வியிடம் நகை பறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் காவேரி மணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.கே.பாபுலால் தீர்ப்பளித்தார். மற்ற இரு வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டார்.
இதேபோல், அவரது கூட்டாளிகள் மூவரும் அனைத்து வழக்குகளிலும் விடுதலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் முருகேசன் வாதாடினார்.
தீர்ப்பினை தொடர்ந்து போலீஸார் காவிரி மணியனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
சிக்கிய கருப்பு ஆட்டிற்கு சிறை தண்டனை.