தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 'ஜெய்ஹிந்த்' என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையைக் குறிப்பிட்டதால் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்ற பெண் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், 'குரூப் தேர்வின் பகுதி இரண்டில் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் தொடர்பான கட்டுரையின் இறுதிப் பகுதியில் 'ஜெய்ஹிந்த்' எனக் குறிப்பிட்டு எழுதி இருந்தேன். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெற்றதால் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் தன்னுடைய பணி வாய்ப்பு பறிபோனது. செல்லாது என அறிவிக்கப்பட்ட விடைத்தாளை மதிப்பீடு செய்து பணி வழங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த், 'இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்து மனுதாரர் ஜெய்ஹிந்த் என உணர்ச்சிவசப்பட்டு எழுதியுள்ளார். இதைப் பொறுப்பற்ற பதிலாகக் கருத வேண்டியதில்லை. இதுபோன்ற கட்டுரைகளை எழுதும்போது இளைஞர்கள் உணர்ச்சி வசப்படுவதன் மூலம் தேசபக்தியை உணர முடிகிறது. விடைத்தாளை செல்லாது என அறிவித்தது சட்டவிரோதம். அந்த விடைத்தாளை திருத்தி, மதிப்பீட்டுக்குப் பிறகு தேர்வாளர் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தால் நான்கு வாரங்களில் பணி வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.