ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெற்று வரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நான்காவது நாளான வெள்ளிக்கிழமையன்று 3,800 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனொரு பகுதியாக புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்டத் தொடர்பாளர்கள் ரெங்கசாமி, புகழேந்தி, செல்வராஜ், ராஜாங்கம், கண்ணன், செல்லத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.சுந்தர்ராஜன், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மதலைமுத்து ஆகியோர் உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 3,800 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.