ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டார்.
இந்தநிலையில், பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தனித் தனியாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இன்று (28.01.2019) மாலைக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்பட்டு, உத்தேச காலி பயிடப்பட்டியல் தாயார் செய்ய வேண்டும். அந்தப்பட்டியலின்படி, தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் 28ம் தேதிக்குள் (இன்றுக்குள்) தவறாது பணியில் சேர வேண்டும் என உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று இயக்குநர்கள் ராமேஸ்வரமுருகன், கருப்பசாமி தங்கள் சுற்றிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியுள்ளார்.
தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பத்தவர்கள் கூறுகையில், ''இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. இந்த ஆணையின் அடிப்படையில் அரசின் வேலை வாய்ப்புக்கு எந்த ஒரு முன்னுரிமையும் அளிக்கப்படாது. அரசால் அறிவிக்கப்படும்போது உடனடியாக எந்த முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்த விடுவிக்கப்படுவீர்கள். பணியேற்க வேண்டிய நாள் முதல் தொகுப்பூதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தொகுப்பு ஊதியம் 10 ஆயிரம் அரசால் நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்ட பின்னரே பெற்று வழங்கப்படும் என்கின்றனர். இதனால் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டுமா? என்று தோன்றுகிறது. எந்த இடத்தில் பணி என்றும் கூறவில்லை'' என்றனர்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான டி.ஆர். ஜான் வெஸ்லி,
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நாங்கள் இன்று போராட்டம் நடத்துகிறோம். இன்று வேலைக்கு திரும்பவில்லை என்றால் காலியிடம் என காட்டி நாளை தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக கூறுகிறார்கள். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் பிடிஏ மூலம் ஊதியம் தர சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தொடக்கப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் கேள்விக்குறிதான். மொத்தத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் ஊதியம் வழங்க இவர்களிடம் நிதி கிடையாது. வேண்டுமென்றே அவர்களையும் அலைக்கழிக்கிறார்கள். தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்று அறிவித்துவிட்டார்கள். அதை எப்படி செயல்படுத்தவது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் வராததை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக செய்திகள் வருகிறதே?
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றுதான் பல இடங்களில் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் மாணவர்களின் பெற்றோர்கள் என்ற போர்வையில் அதிமுகவினர் ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.
தொடர்புடைய செய்தி:-
ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: ஜாக்டோ-ஜியோ கோரிக்கை