மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று (27.01.2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மெரினாவில் 50,422 சதுர அடியில், 80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிட திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கூடியுள்ளதாலும், தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதாலும் தீவுத்திடல், சென்னை பல்கலைகழக வளாகம், பட்டினம்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் திரள்வதால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திரண்டிருந்த கூட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் முதுகில் வேல்குத்தி ஆடினார். வெளியூரிலிருந்து நிறையபேர் அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் சாலையிலேயே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அதேபோல் அருகில் இருந்த டாஸ்மாக்கிலும் கூட்டம் அலைமோதியது. காமராஜர் சாலை முழுவதும் கட்சியினர் திரண்டுள்ளதால் பொதுப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வழியில் செல்லும் அரசு பேருந்துகள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன. சாந்தோமிலிருந்து பட்டினம்பாக்கம் வழியாகவும், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகவும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்ட நிலையில், சில பகுதிகளில் போக்குவரத்துக்கு நெரிசலும் ஏற்பட்டது.