Skip to main content

''அது அவருடைய கைரேகை தான்...''-இரண்டாம் நாள் விசாரணையில் ஓபிஎஸ்!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ, மார்ச் 21ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓபிஎஸ் நேற்று முதல் முறையாக ஆஜராகினார். அவரிடம் நேற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் மொத்தம் 78 கேள்விகள் ஜெயலலிதா தொடர்பாக கேட்கப்பட்டது. பல கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது, அதுபற்றி என்னிடம் யாரும் கூறவில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.

 

குறிப்பாக  2016ஆம் ஆண்டு செப்.22ஆம் தேதி ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தெரியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவரை நான் பார்க்கவில்லை. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் நிகழ்வில்தான் அவரைப் பார்த்தேன். அதற்கு பிறகு பார்க்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

 

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் விசாரணைக்காக ஓபிஎஸ் மீண்டும் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். இன்று ஆஜரான ஓபிஎஸ், 'இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும். திருப்பரங்குன்றம், தஞ்சை, அவரக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ததும் ஜெயலலிதா தான். சிகிச்சை நேரத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட உணவுகள் என்னென்ன என்பது பற்றி எனக்கு தெரியாது. அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நேரத்தில் அவர் நலமாக இருப்பதாக சசிகலா ஒரு சிலமுறை கூறியிருந்தார். அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் கூறவில்லை' என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்