
இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது சந்திரயான் - 3.
சந்திரயான் -3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையைத் துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கத் தயாராகி வந்தனர். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் தரையிறங்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறங்கி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என சாதித்தது சந்திரயான் - 3.

இந்தநிலையில் சந்திரயான் - 3 பணியில் திட்ட இயக்குநராக பணியாற்றிய தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'மிகப்பெரிய சாதனையை இஸ்ரோ செய்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இஸ்ரோவின் மொத்த குழுவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில் ரோவரின் மற்ற செயல்பாடுகள் நடக்கும். பணிகள் அனைத்தும் ரொம்ப சவாலாக இருந்தது. தற்போது பணிகள் முடிந்துள்ளது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.