Skip to main content

'நீட் தேர்வின் தீமையை முன்னறிவிப்பு செய்தது திமுகதான்'- முதல்வர் மு.க.ஸ்டாலின்  

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
'It was DMK who predicted the evil of NEET'- Chief Minister M.K.Stalin

நீட் தேர்வின் தீமைகளை அனைவருக்கும் புரிய வைக்க ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது திமுகதான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 7-க்கும் மேற்பட்டோர் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பிய நிலையில், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் எழுப்பப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'நீட் தேர்வின் ஆபத்தை முதலில் முன்னறிவித்தது திமுக தான். ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து நீட் அடிப்படையிலான சேர்க்கையின் தாக்கத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். முழுமையாக இதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரை அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுவரை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சமீபத்திய பெரிய அளவிலான முரண்பாடுகள் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருவதை வெளிக் காட்டுவதாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் தேசிய அளவில் பரப்புரை மேற்கொள்வோம். நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குரல் எழுப்ப இருக்கிறார்கள்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நீட் தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணைத்து எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.

சார்ந்த செய்திகள்