Skip to main content

' 40 பேரும் அமைதியாக இருந்தது வருத்தமளிக்கிறது' - தமிழிசை வேதனை

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'It is sad that all 40 people were silent'- Tamilisai Angam

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தில் இன்னும் சற்று ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை நிலவி இருக்கும். கடுமையான கண்டனத்தை ராகுல் காந்தி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று சொல்லி ஒட்டுமொத்தமான இந்துக்களையும் அவர் மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். இதற்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல ஒரு பாராளுமன்றத்திற்கு என்று விதிமுறைகள் இருக்கிறது; நடைமுறைகள் இருக்கிறது. இதையெல்லாம் மீறி படம் காண்பித்து படம் காண்பித்துக் கொண்டிருந்தார். நேற்று மூன்று அமைச்சர்கள் ராகுல் காந்திக்கு எழுந்து பதில் சொன்னார்கள் என்பதை சிலர் எதிர்மறையாக சொல்கிறார்கள்.

'It is sad that all 40 people were silent'- Tamilisai Angam

ராகுல் காந்தி எல்லாவற்றையும் தவறாக சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அக்னீவீர் தியாகிகள் நிச்சயமாக நாட்டிற்காக உயிரை ஈந்தவர்கள். அவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை என்று தவறான கருத்தை ராகுல் காந்தி சொன்னார். உடனே அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து 'இல்லை ஒரு கோடி ரூபாய் அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் உயிருக்கு ஈடு இணை இல்லை. இருந்தாலும் கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தார். அதேபோல் விவசாய திருத்தச் சட்டம் தொடர்பான தவறான கருத்தையும் ராகுல் காந்தி சொன்னார். அதற்கும் அமைச்சர் பதிலளித்தார். அதேபோல் உள்துறை அமைச்சரும் அவர் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க வேண்டி வந்தது. ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் நீங்கள் பார்த்தது ஏதோ தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, முதல் பேச்சை இப்படித்தான் பேச வேண்டும் என்று ஒரு பயிற்சியின்மையோடு, முதிர்ச்சியின்மையோடு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார் என்பதாகத்தான் பார்க்க முடிகிறது.

எல்லாவற்றையும் விட மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தக்கூடியது தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரி உட்பட 40 எம்.பிக்கள் அங்கிருந்தனர். இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு ராகுல் காந்தி பேசினாலும் இந்துக்களின் வாக்குகளை எல்லாம் வாங்கியவர்கள் ஒரு எதிர்ப்பு குரல் கூட கொடுக்காமல் அமர்ந்திருந்ததுதான் நமக்கெல்லாம் வேதனை. இவர்கள் அப்படித்தான் செய்வார்கள். 40 பேர் அங்கே சென்றதால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இருக்காது. சத்தம் போடுவார்கள் அவ்வளவுதான்'' என்றார்.

சார்ந்த செய்திகள்