அண்மையில் தமிழகத்தில் மணல் குவாரி மற்றும் ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கக்கூடிய புரவங்கரா என்ற அந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தான் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனமானது பெங்களூரு, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிறுவனங்களை தொடங்கி அடுக்குமாடி குடியிருப்புகளையும் நிலங்களையும் வாங்கி விற்பனை செய்து வருகிறது.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் இந்த நிறுவனமானது தொடங்கப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்றதில் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் 1100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிறுவனம் வருமானத்தை ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எட்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.