சென்னை பார்க் டவுன் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் மருந்து நிறுவனம் தொடர்பான 20 இடங்களில் கடந்த 18 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (20.10.2023) மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி மருந்து பொருட்கள் மற்றும் ரசாயன தயாரிப்பு ஆலை, கிடங்குகள், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் மூன்றாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மருந்து குடோனிலும், ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்க் தெருவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பரிசோதனை கூடத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இரு நிறுவனங்கள், வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், மாதவரத்தில் உள்ள குடோன், தண்டையார்பேட்டை, மன்னடி, தம்பு செட்டி தெரு, தங்கசாலையில் உள்ள கிளை நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி கடலூர் மாவட்டம் குடிகாடு சிப்காட் பகுதியில் இயங்கி வரும் மருந்து நிறுவனத்திலும் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.