தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை போன்ற பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடலூரில் மொத்தம் 6 இடங்களில் 7 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடலூரில் அதிமுக சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடும் நிலையில், அவரின் ஆதரவாளர்களான சரவணன், மதியழகன், பாலகிருஷ்ணன், சுரேஷ், தமிழ்செல்வன் ஆகியோரது வீடுகளில் காலை 10 மணி முதலே சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக வருமான வரித்துறை சார்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் புகாரின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.