புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு இலுப்பைபுஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர் இவரது மகன் சபரிஷ் (வயது 9). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்தான்.
வியாழக்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுவன் மாலையில் குளிப்பதற்கு அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். குளத்திற்குள் இறங்கிய போது திடீர் பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்ட சிறுவனால் மீள முடியவில்லை. குளத்திற்குள் இறங்கிய சிறுவனை நீண்ட நேரமாக காணவில்லை என அக்கம்பக்கத்தினர் குளத்திற்குள் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் மீட்கப்படாததால் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்துவிட்டு கிராமத்தினர் தண்ணீரில் இறங்கி தேடியுள்ளனர்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவன் சபரிஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதனர். சீராக தூர்வாராமல் ஆங்காங்கே ஆழமான பள்ளங்கள் அதிகமாக இருந்ததால் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் ஆழம் தெரியாமல் சிறுவன் உள்ளே போய் சிக்கிக் கொண்டதாக கூறுகின்றனர் அப்பகுதியினர். பள்ளங்களை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயனில்லாமல் ஒரு உயிர் போய்விட்டதாகக் கதறுகின்றனர்.