இன்று விருதுநகர் இராஜபாளையதில் செய்தியாளர்களை சந்தித்த பால்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,
கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு காரணம் அவர் பேசிய பேச்சின் வீரியம் அதிகம் எனவேதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது குறித்து எந்த பாரபட்சமும் இல்லை மற்றவர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அரிவாளை கையில் வைத்திருப்பவருக்கும், அரிவாளால் வெட்ட வருபவருக்கும் வித்தியாசமில்லையா? வெட்ட வருபவரை தானே முதலில் பிடிக்க வேண்டும். கருணாஸ் வெட்டுவேன் என்கிறார், என்னை கேட்டுவிட்டு வெட்டுங்க என்கிறார். கருணாஸ் எப்படி இருந்தார், எங்கே இருந்தார் என செய்தித்துறை அமைச்சராக இருந்த எனக்கு தெரியும்.
திருவாடனை தொகுதியில் நிற்கும் பொழுது எனக்கு ஒத்துழைப்பே இல்லை என கதறினார். நான் அப்போது அங்கிருந்தவர்களிடம் பேசி அவருக்கு வேலை செய்து தரும்படி பேசி அதன்பின்தான் அவர் வெற்றிபெற்றார். வெற்றிபெற்றவுடன் அம்மாவின் ஆட்சியின் சிறப்பு பற்றி பேசிய கருணாஸ் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பற்றியும் பேசியுள்ளார். இந்நிலையில் எதோ ஒரு நினைப்பில் தன்னால்தான் இந்த ஆட்சி வந்தது என்கிறார். ஜனாதிபதியையே நான்தான் ஜெயிக்க வைத்தேன் என்கிறார். அவர் ஓட்டு போட்டு மட்டுமா அவர் ஜெயிச்சாரு எல்லாருமேதான் ஓட்டு போட்டோம். நாங்களும் பங்களிப்பு கொடுத்தோம் என்று சொல்வதை விடுத்து நான்தான் ஜெயிக்கவைத்தேன் எனக்கூறும் அளவிற்கு அவ்வளவு பெரிய அதிகாரமா இருக்கு கருணாஸிடம்.
கருணாஸ் என்று பெயர் வைத்தாலே இப்படித்தான் இதேபோல்தான் இலங்கையிலும் ஒரு கருணா தமிழர்களை காட்டிக்கொடுத்து 2 லட்சம் இறப்புகளுக்கு காரணமாக இருந்தார். இப்பொழுது தமிழ்நாட்டில் எல்லா சமுதாயமும் இணக்கமாக இருக்கிற நேரத்தில் பெரிய கலவரத்தை மேற்கொண்டு எடப்பாடி ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கித்தரும் அளவிற்கு ஒரு ஏவுகணை தாக்குதல், அதிகார தாக்குதல் நடத்தவே இப்படி நடைபெற்றுவருகிறது எனக்கூறினார்.