ராமேஸ்வரம் மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. மேலும் அவர்களின் இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிக்கே வந்து சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்கதையாகி வரும் இந்த கைது சம்பவங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ராமநாதபுரம் மீனவர்கள் ஆறு பேர் ஜனவரி 22ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. தொடர் கைது நடவடிக்கைகள் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பறிப்பதாக உள்ளது. மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், மத்திய அரசு உடனே கவனம் செலுத்துவது அவசியம்' என தெரிவித்துள்ளார்.