தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இதனால் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஓட்டேரி பகுதியில் விலையில்லா கொசு வலைகளை பயனாளிகளுக்கு வழங்கிய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். வீனஸ் காலனி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ''எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளது. மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசின் பணிகள் பற்றி எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இருக்கட்டும். எங்களை மக்கள் பாராட்டினால் போதும்'' என்றார்.
மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, சீர்காழியில் நாளை தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சீர்காழியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மெய்யநாதான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.