தமிழ்நாட்டை பழி வாங்கக்கூடிய வகையில் மத்திய அரசு செயல்படுவது தெளிவாக தெரிகிறது என திமுக செயல்தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஸ்டாலின்: நியூட்ரினோ திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதுதான் திமுக கொள்கை. எனவே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மேற்கொண்ட நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கி வைத்திருக்கிறேன்.
செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறதே?
ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பது இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது. அடுத்த 3 மாதங்களுக்குள் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிடும். எனவே, அந்தத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை பழி வாங்கக்கூடிய வகையில் மத்திய அரசு செயல்படுவது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்திருக்கிறது.
செய்தியாளர்: மத்திய அரசு மனு தாக்கல் செய்த பிறகு, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறதே?
ஸ்டாலின்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதகால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்த பிறகு, ‘சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா’ என்பதுபோல தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருக்கிறது. அதனால் தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்பே நான் சட்டமன்றத்தில் தெரிவித்தேன். ஆனால், இப்போதுதான் அதை செய்திருக்கிறார்கள். இதிலிருந்து, மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து ஒரு கபட நாடகத்தை நடத்தி, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது. இருவரும் சேர்ந்து தமிழக மக்களை மிக மோசமாக வஞ்சித்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.