இந்தியாவே எதிர்பார்த்திருந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு இரு கட்சிகளின் பிரச்சாரங்கள் முடிந்து, கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நேற்று (13ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சம பலத்துடன் இருந்த நிலையில், அடுத்தடுத்து அனைத்து தொகுதிகளிலும், பாஜகவை பின்னுக்குத் தள்ளி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை தொகுதிக்கும் மேல் முன்னிலை வகித்து பிரமாண்ட வெற்றியை சொந்தமாக்கியுள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸின் இந்த மிகப்பெரும் வெற்றியை அக்கட்சியினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அக்கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க போகிறது. இது எங்களுக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி. இது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது. பாஜகவினுடைய ஊழல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பி ஒரு நல்லாட்சி வரவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு பெருவாரியான வாக்குகளை செலுத்தி வெற்றியை தந்திருக்கிறார்கள்.
இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலுடைய முடிவை வைத்து பாராளுமன்ற தேர்தல் முடிவு அமையும் என்று கருத்துச் சொல்ல மாட்டேன். ஆனால் இது நிச்சயமாக எங்களுக்கு பூஸ்டாக தான் இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
இதையே வைத்துக் கொண்டு மற்ற மாநிலங்களிலோ அல்லது மத்திய மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் இதே முடிவு இருக்கும் என சொல்ல இன்றைக்கு தயாராக இல்லை. ஆனால் இது எங்களுக்கு ஒரு பலம்தான். இந்த வெற்றியில் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. எங்களுடைய பிரச்சாரத்தை முன்கூட்டியே ஆரம்பித்து விட்டோம். கடைசி நேரத்தில் ஆரம்பிக்கவில்லை. முன்கூட்டியே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே சொல்ல ஆரம்பித்து விட்டோம்''என்றார்.