நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.
மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.