கடந்த ஜூலை 30 ஆம் தேதி நுகர்வோர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டின் எடை குறைவாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதுகுறித்து பேசியிருந்தார். ஒரு லிட்டர் தண்ணீரை அளவுகோலில் வைக்கும் பொழுது அது ஒரு கிலோ இருக்கும். ஒரு லிட்டர் பாலை அளவுகோலில் வைக்கும் பொழுது 1.03 கிலோ இருக்கும். சரி சமமாக பார்த்தால் தண்ணீரும், பாலும் ஒரே அளவுதான் இருக்கும். லிட்டரிலும் சரி, கிலோவிலும் சரி தண்ணீரும், பாலும் ஒரே அளவுதான் இருக்கும். ஆனால் நமது ஆவின் பால் பாக்கெட் அரை லிட்டர் பாலை எடுத்து எடைபோட்டால் 430 கிராம், 440 கிராம் தான் வருகிறது என சமூக வலைத்தளங்களில் நிறைய பேர் தெரிவித்து வருகின்றனர் என் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் 'நுகர்வோர் நலன் பேணும் வகையில் அனைத்து தரம் மற்றும் அளவுகள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்திற்கு உட்பட்டு பால் விநியோகம் செய்வதில் உறுதியாக இருக்கிறோம். இயந்திரத் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏதேனும் அளவு மாறுபட்டு கோளாறு ஏற்பட்டிருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு மாற்று பால் பாக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது ஆவின்.