தமிழக சட்டப்பேரவையில் திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசிய விவரம் பின்வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
ங்கு கேள்வி நேரத்தைப் பற்றி ஒரு விவாதம் நடைபெற்று மூலக் கேள்விகளுக்கு, துணைக் கேள்விகளுக்கு கேட்கின்ற அந்த சூழ்நிலைப் பற்றி எல்லாம் பேரவைத் தலைவர் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். எங்களுடைய எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் அவர்களும் சில கோரிக்கைகளை வைத்து உங்களிடத்திலே வேண்டுகோளாகவும் வைத்திருக்கிறார்கள். எனவே, இந்த நிலை நீடிக்கும் என்று சொன்னால் நாங்கள் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கக்கூடிய வகையில், எதிர்ப்பை தெரிவிக்கக்கூடிய வகையிலே, நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை வரும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதையும் தாண்டி, நம்முடைய பேரவைத் தலைவர் அவர்கள் இப்போது விளக்கத்தைச் சொல்லி, இன்றோடு இந்த நிலை இருக்கும், நாளையில் இருந்து ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு பேரவைத் தலைவர் முன் வந்திருப்பது உள்ளபடியே எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியை தருகிறது. எனவே, அந்த நிலை தொடர்கிற போது, நாங்கள் மேற்கொள்ளவிருந்த வெளிநடப்பு என்ற நிலையைக்கூட மாற்றிக் கொள்கிறோம். அதே நேரத்தில், பேரவைத் தலைவர் அவர்களிடத்தில் ஒரு வேண்டுகோள்.
எங்களுடைய துணைத் தலைவர் எடுத்துச் சொன்னது போல, இந்த அவை நடந்து கொண்டிருக்கக்கூடிய நேரத்திலே அல்லது அவை முடிந்ததற்கு பிறகு முன் வரிசையில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சியினுடைய தலைவர்களை எல்லாம் உங்கள் அறைக்கு அழைத்து இதுபற்றி எப்படி முறைப்படுத்தலாம் என்பதை பற்றியும் நீங்கள் கலந்து பேசி அதற்குப் பிறகு ஒரு முடிவெடுக்கிற விதத்தில் அது நல்ல வகையில் அமையும் என்பதையும் நான் பேரவைத் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
(சபாநாயகர் பதில்)
ஸ்டாலின்: இங்கே, மின்துறை அமைச்சர் அவர்கள் ஏதோ நீங்கள் எடுத்திருக்கக் கூடிய முடிவுக்கு ஏற்ற வகையிலே சில கருத்துகள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், தேவையில்லாமல் ஏதோ அரசியல் நாகரீகத்தை பற்றி எல்லாம், ஏதோ அவருக்கு எல்லா நாகரீகமும் தெரிந்ததுபோல இங்கு சில செய்திகளை பதிவு செய்திருக்கிறார். நேற்றைய தினம், நீங்கள் எப்பொழுது என்னுடைய பேச்சிலே அந்த வார்த்தையை நீக்குனீர்களோ, அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் எங்களுடைய துணைத் தலைவர் அவர்கள் எங்களுடைய உறுப்பினர் வேலு அவர்கள் இருவருமே நேரடியாக உங்களுடைய அறைக்கு வந்து அதை எடுத்தது தவறு அதை தயவுகூர்ந்து சேர்க்க வேண்டும், இல்லையென்று சொன்னால் நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நாங்கள் எடுத்துச் சொல்லி அதற்குப் பிறகுதான் அதை நாங்கள் அவையிலே கிளப்பி இருக்கிறோம். ஒருவேளை, அது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். தெரியாமல் இருந்த காரணத்தால் அந்தக் கருத்தை அவர் எடுத்து பேசியிருக்கிறார். அது, உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது என்பதை இந்த அவையில் நான் பதிவு செய்கிறேன்.
ஸ்டாலின்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜாக்டோ - ஜியோ. அந்த, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பிலே, நேற்றைய தினம் காலவரையற்ற ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அவர்கள் அறிவித்து, அதனை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று காலையிலே நான் சட்டமன்றத்திற்கு வருகிற நேரத்தில் கூட அவர்களையெல்லாம் நான் சந்தித்து விட்டு தான், இந்த அவைக்கு வந்திருக்கிறேன்.
அப்படி சந்தித்த நேரத்தில், அவர்கள் என்னிடத்தில் பல கோரிக்கைகளை எல்லாம் முன்வைத்து இருக்கிறார்கள். இவையெல்லாம் என்னிடத்தில் புதிதாக முன்வைத்த கோரிக்கைகள் அல்ல, ஏற்கனவே, அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள் தான். அந்த அமைப்பைச் சார்ந்து இருக்கக்கூடியவர்கள் கடந்த 17 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து தமிழகத்திலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எழிலகத்திலே சுமார் 150 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த உண்ணாவிரத போராட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாவட்டத் தலைநகரங்களில் 40,000 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடிய வகையில் தொடர்ந்து அந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அவர்கள், இந்த அரசிடம் எடுத்து வைக்கும் கோரிக்கைகள் என்னவென்று கேட்டால், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை, அதுமட்டுமல்ல, சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறுவோர், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை எல்லாம் அடிப்படையாக வைத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இருக்கின்ற நேரத்தில், மேலும் பணியாளரை குறைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதி சேசய்யா தலைமையில் போடப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ள அரசாணைகள் 100 மற்றும் 101 மூலமாக ஒழிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை திரும்பவும் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
ஏற்கனவே, இந்த அரசு ஊழியர்கள் 8.5.2018 அன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி ஒரு முற்றுகை போராட்டத்தினை நடத்திட முயற்சித்த நேரத்தில், அதை இந்த அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது. எப்படி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆசிரியர்கள் தேவையோ, அதே போல் மக்களின் சேவைக்கு அரசு ஊழியர்கள் தேவை தான் அவசியமாக இருக்கிறது. எனவே, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவோ, ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கவோ இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், இந்த அரசையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது போராட்டத்திலே ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை உடனடியாக முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் எது நியாயமாக நிறைவேற்ற வேண்டுமோ, எதற்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதனையெல்லாம் நிறைவேற்றி, அவர்கள் போராட்டத்தை நிறுத்தக் கூடிய அளவிற்கு அவர்களிடம் பேசிட வேண்டுமென நான் வலியுறுத்தி வற்புறுத்தி கேட்டு அமர்கிறேன்.
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,
நான் இங்கு எடுத்து வைத்த கோரிக்கை, அதேபோல, எதிர்க் கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு துணை முதலமைச்சர் அவர்கள் ஒரு விளக்கம் தந்திருக்கிறார்கள். அந்த விளக்கத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை. நான் கேட்கின்ற ஒரே ஒரு வேண்டுகோள், ஒரே ஒரு கோரிக்கை, இன்று காலையில் கூட உண்ணாவிரத போராட்டத்திலே ஈடுபட்டிருக்கக்கூடிய அந்த நிர்வாகிகளை, அரசு ஊழியர்களை ஆசிரியர்களை எல்லாம் சந்தித்து விட்டுதான் வந்தேன். நானே சொன்னேன், தங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்தப் போராட்டம் தேவைதானா என்று ஒரு வேண்டுகோளாய் எடுத்து வைத்த பொழுது, அவர்கள் சொன்னது எங்களை முதலமைச்சர், அரசு அழைத்துப் பேசிட வேண்டும். காலவரையற்ற உண்ணாவிரதத்தை அறிவித்திருக்கிறார்கள், இன்று இரண்டாது நாள், ஆகவே நீங்கள் தயவு கூர்ந்து அவர்களை அழைத்துப் பேசிட வேண்டும். அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார். இந்த அரசினுடைய பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
(துணை முதலமைச்சர்)
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,
நான் தூண்டிவிட்டு வந்ததாக சொல்கிறார்கள். அந்த பொருள்பட அவர் நினைப்பார் என்று சொன்னால், நாங்களும் அவர்கள் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் தூண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. எனவே, நீங்கள் அதை எப்படி தூத்துக்குடியில் நடைபெற்ற அந்த போராட்டத்திலே அவர்களை எல்லாம் நீங்கள் அழைத்துப் பேசாமல் ஏற்பட்ட நிலை போலதான் இப்போதும் நீங்கள் அழைத்துப் பேசு முற்படக்கூடிய நிலையிலே இல்லை. எனவே, நீங்கள் அழைத்துப் பேசாத காரணத்தால் இதை கண்டித்து நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கக்கூடிய வகையிலே வெளிநடப்பு செய்கிறோம்.
பின்னர், அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட பிறகு கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி அவர்கள் பேசிய விவரம் பின்வருமாறு:
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,
இலவச மின்சாரத்தை உங்கள் ஆட்சியிலே நிறுத்தினீர்கள். அது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அதற்கு பதில் சொல்லுங்கள்.
(மீன்வளத்துறை அமைச்சர்)
(வருவாய்த் துறை அமைச்சர்)
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,
இங்கு வருவாய்த் துறை அமைச்சர் தவறான தகவலை அவையிலே பதிவு செய்கிறார், அமைச்சராக இருப்பவரே இப்படி தவறான தகவலை பதிவு செய்வது முறைதானா என்பது என்னுடைய கேள்வி? ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் போராடி அந்த சங்கத்தினுடைய தலைவராக இருந்த நாராயணசாமி போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு எல்லாம் ஆளாக்கப்பட்டார்கள். அப்பொழுதுதான், இந்த கலவரம் நடந்திருக்கிறது. அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்ததற்கு பிறகு, நீங்கள் ஒரு பைசா குறைக்கவேண்டும் என்று சொன்னீர்கள், கலைஞர் சொன்னார் இதே அவையிலே இனிமேல் நீங்கள் மின்சாரத்திற்கு விவசாயப் பெருங்குடி மக்கள் ஒரு பைசா கூட தர வேண்டிய அவசியமில்லை. இலவச மின்சாரத்தை தருகிறேன் என்று சொல்லி அறிவித்தார்கள்.
(முதலமைச்சர்)
(சபாநாயகர்)