ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்பே மக்களுக்கு வேட்டி, சேலைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 29 சதவீதம் வேட்டியும் , 42 சதவீதம் சேலையும் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஈரோடு கந்தவேல், “அரசு பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்குவதற்காக ஒரு கோடியே 75 லட்சம் வேஷ்டிகளும், ஒரு கோடியே 75 லட்சம் சேலையும் வழங்க உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டது. அதில் 30 லட்சம் வேஷ்டி மற்றும் 30 லட்சம் சேலைகள் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யவும், மற்றவைகளை விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு கோடியே 40 லட்சம் வேஷ்டி மற்றும் சேலைகளை உற்பத்தி செய்ய உத்தரவிட்டது . இதனிடையே கடந்த இரு மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் விசைத்தறியாளர்கள் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொங்கலுக்கு குறைந்த நாட்களே உள்ளது. இதுவரை மொத்த உற்பத்தியில் 29 சதவீதம் மட்டுமே வேஷ்டி உற்பத்தியும், சேலைகள் மொத்த உற்பத்தியில் 42 சதவீதம் மட்டுமே உற்பத்தியாகியுள்ளது. வரும் பொங்கலுக்குள் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்து அரசு நிர்ணயித்தபடி ஒரு கோடியே 25 லட்ச வேஷ்டியும், ஒரு கோடியே 25 லட்சம் சேலைகளும் உற்பத்தி செய்ய இயலாத இயலாது. இதற்கு காரணமே நிர்வாக குளறுபடிதான். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இலவச வேஷ்டி , சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்படும். இந்த ஆண்டு மூன்று மாதம் காலதாமதமாகவே அதாவது அக்டோபர் மாதம் தான் அரசாணை வெளியிட்டது. அதற்கு காரணம் வேட்டி, சேலை டிசைன் மாற்றலாம் என்றும் முடிவு செய்து தாமதப்படுத்தி விட்டார்கள் அது தான் இந்த தொய்வுக்கு முதற்காரணம்.
மேலும் அக்டோபர் மாதம் அப்போது வழங்கப்பட்ட நூல் தரமில்லாமல் இருந்தால் நவம்பர் வரை உற்பத்தி குறைந்தளவே இருந்தது. இப்போது தான் தரமான நூல்களை கைத்தறி துறை வழங்குகிறார்கள். எனவே பொங்கலுக்குள் அரசு நிர்ணயித்த 1 கோடியே 45 லட்சம் வேட்டி மற்றும் 1 கோடியே 45 லட்சம் சேலைகளை உற்பத்தி செய்வது உண்மையில் நடக்காது. இதனை உற்பத்தி செய்ய மேலும் சில மாத காலம் அவகாசம் தேவைப்படும்." என்றார். ஆனால் கைத்தறி துறை இயக்குநர் சரவணன், “உற்பத்தி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்போது 60 சதவீதம் உற்பத்தியாகி விட்டது. குறிப்பிட்ட காலத்தில் தேவையான வேட்டி, சேலைகள் வந்து விடும் அரசு அறிவித்தபடி பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் பொது மக்களுக்கு கிடைக்கும்” என்றார். இதை வைத்து தான் பொங்கலுக்கு கரும்பு போய், வேட்டி, சேலை பிரச்சனை வந்துள்ளது என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.