Skip to main content

குலதெய்வ வழிபாடு விவகாரம் - ஆளுநர் மாளிகை விளக்கம்! 

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Issue of cult of idolatry - Governor's House explanation

குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டும் எனத் தமிழக ஆளுநர் பேசியதாக கூறி  செய்திகள் பரவின.  அதில், “தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்” என ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், “குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டும் எனத் தமிழக ஆளுநர் பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுக்கிறது. அதோடு தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. 

Issue of cult of idolatry - Governor's House explanation

இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்தப் பிரச்சனையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக்கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்