நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர சுகாதார நிலையத்தில் கடந்த 7 ஆம் தேதி திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அப்போது அந்த பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக அனுராதா என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த சூழலில் குழந்தையின் பெற்றோர் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்ட மருத்துவர் அனுராதா, குழந்தைகளை விற்பனை செய்யும் கரூரைச் சேர்ந்த இடைத்தரகர் லோகாம்பாள் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லோகாம்பாள் குழந்தையின் பெற்றோரிடம் மூன்று லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண் குழந்தையை விற்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து திருச்செங்கோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மருத்துவர் அனுராதா மற்றும் இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்று இருப்பதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சட்டவிரோதமாக சிறுநீரக தானம் பெற்று இருப்பதும் தெரிய வந்தது. மேலும் தனிப்படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு மருத்துவர் அனுராதா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இடைத்தரகர் லோகாம்பாள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமாரப்பாளையத்தை சேர்ந்த இடைத்தரகர் பாலாமணியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகர் பாலாமணி குழந்தையை வாங்கி விற்கும் தொழில்நுட்பத்தை லோகாம்பாளுக்கு கற்றுக்கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.