நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது பொய் வழக்கும், குழந்தைகள் மீது தடை செய்யப்பட்ட கன்னித் தன்மையை பரிசோதிக்கும் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளதைக் கோயில் பொதுதீட்சிதர்கள் சார்பில் வரவேற்கிறோம் என கோயில் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக ஆளுநர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீதுள்ள வெறுப்பால் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கன்னித் தன்மை பரிசோதனையான தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர கடந்த ஒரு வருடமாக கோயிலுக்கு பல்வேறு கடிதங்கள் அளித்து வருகின்றனர். அதற்கு தீட்சிதர்கள் சார்பில் சட்ட விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் சில தீட்சிதர்களுக்கு எதிராக சிறார் திருமண தடை சட்டத்தின் கீழ் சில வழக்குகள் பதியப்பட்டன. அந்த வழக்குகளில் சில தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற வழக்குகளில் அதிக பட்ச தண்டனை இரு வருடம் தான். அதற்கு கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 7 வருடங்களுக்கு கீழ் தண்டனை பெறும் குற்ற வழக்குகளில் கைது நடவடிக்கை அவசியமற்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் கைது தேவையற்றது. இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை தேவையற்ற வகையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் சோதனையை பாதிக்கப்பட்ட மைனர் சிறுமியிடம் நடத்தியுள்ளது. இதுகுறித்து அக்டோபர் மாதம் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளேன்.
மேலும் பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள் தங்க கணேஷ் தீட்சிதர், ஈஸ்வர தீட்சிதர் 24-10- 22ல் தேசிய குழந்தைகள் உரிமை கமிஷனுக்கும், தமிழக குழந்தைகள் உரிமை கமிஷன், தமிழக உள்துறை செயலாளருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் மனு அனுப்பினார்கள். பொதுதீட்சிதர்கள் அரசு சட்டத்தை எப்போது மதித்து வருகிறார்கள், அதனை மீறி செயல்படவில்லை. கோயில் பூஜை செய்வதற்கு 21 வயது திருமணமான ஆண் தான் தேவையே தவிர, 21வயதிற்கு குறைந்த மைனர் சிறுவனுக்கோ, மைனர் சிறுமிக்கோ திருமணம் செய்தால்தான் பூஜை செய்ய முடியம் என்று தவறாக பிரசாரம் நடைபெறுகிறது. அது தவறானது. மேலும் இந்த வழக்குகளை பதிந்து மனித உரிமை மீறலும், குழந்தைகள் உரிமை மீறலும் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த வழக்குகளை தமிழக காவல்துறை விசாரிக்கக்கூடாது.
அதனை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் இந்த விசாரணை சரியாக இருக்கும் என தீட்சிதர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. தற்போது தமிழக ஆளுநரே இரு விரல் சோதனையை மைனர் குழந்தைகளிடம் நடத்தக்கூடாது. அது தவறு என ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது இரண்டு விதத்தில் தவறு. குழந்தைகள் உரிமை சட்டத்தில் இருவிரல் பரிசோதனை தேவையற்றது. மற்றொன்று இருவிரல் பரிசோதனை செய்யப்படும் மைனர் பெண், தன் வாழ்நாள் முழுவதும் பாதிப்பிலிருந்து விடுபட முடியாது என்பதாகும். நீதிமன்ற தடையை மீறி, சட்டவழிமுறைகளை பின்பற்றாமல் காவல்துறையினர் தமிழக அரசுக்கு உதவியாக சிதம்பரம் நடராஜர் கோயில் எப்படியாவது கையகப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தீட்சிதர்களை துன்புறுத்துவதற்காக இதுபோன்ற சோதனைகளை செய்துள்ளார்கள். தமிழக ஆளுநர் இருவிரல் சோதனையை செய்யக்கூடாது என பொதுவெளியில் சொல்வதால், இனிமேல் இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும் என்றும், காவல்துறை மனித உரிமைகள் மதித்தும் நடக்க வேண்டும்” என தெரிவித்தார்.