தன்னுடைய இரண்டு மகள்களையும் ஈஷா யோகா மையத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 30.09.2024 அன்று நடைபெற்றது. சம்பந்தப்பட்ட மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையின் பொழுது பெற்றோர்கள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக மகள்கள் கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'நீங்களே முற்றும் துறந்த ஞானிகள் ஆன பின் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஜக்கி வாசுதேவ் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இவர்களுக்கு ஏன் சன்னியாசி நிலை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. ஆனால் பல சந்தேகங்கள் உள்ளது' என ஐயப்பாடை தெரிவித்தனர். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை வரும் அக்.4 தேதிக்குள் தர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து 01.10.2024 அன்று ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடைபெற்றது. டிஎஸ்பி சிவகுமார் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நலக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 9 மணி நேரதிற்கு மேல் முதல் நாள் விசாரணையில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் (02.10.2024) ஈஷா யோகா மையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்றது.
இரண்டு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவிக்கையில், ''நேற்று ஹெல்த் இன்ஸ்பெக்டர், ட்ரக் இன்ஸ்பெக்டர், ஃபுட் சேப்டி டிபார்ட்மெண்டில் இருந்து எல்லாம் வந்திருந்தார்கள். டாக்டர் வந்திருந்தார்கள். இரண்டு நாட்களில் எந்த அளவிற்கு கவர் பண்ண முடியுமோ அந்த அளவிற்கு வழக்குகளை கவர் செய்து இருக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்து யோகா மையத்தில் தங்கி இருப்பவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துள்ளோம். அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. நாளை கோர்ட்டில் சமர்ப்பிப்போம். இதுவரை அவர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் எல்லாவற்றையும் எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் எடுத்துள்ளோம். அதில் இரண்டு மூன்று குறிப்பிடத் தகுந்த வழக்குகள் இருக்கிறது. அதைப் பற்றிய முழு விவரங்களையும் நாங்கள் சமர்ப்பிப்போம்'' எனக்கூறி இருந்தார்.
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஈஷா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு அவசர வழக்காக ஈஷா தரப்பில் கொடுக்கப்பட்ட மனு இன்று விசாரிக்கப்பட்டது. இதில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், சென்னை நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையிடம் இருந்து எந்த அறிக்கையை கேட்டிருந்ததோ அந்த அறிக்கையை தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் தெளிவுகள் தேவைப்படும் பட்சத்தில் இன்றைய தினமே மீண்டும் விசாரணை செய்து உத்தரவுகள் பிறப்பிக்க தயார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.