விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், சித்திரை, ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களில், பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வர்.
இருக்கன்குடி மாரியம்மனை வழிபடுபவர்கள், நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி, பித்தளை பொருட்களையும், விலையுயர்ந்த பட்டுப் புடவைகள் மற்றும் அங்கவஸ்திரங்களையும் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இக்கோவில் பூசாரிகள் மீது, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பொருட்களை முறையாக கணக்கில் காட்டுவதில்லை என்று புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன். அப்போது, 15-12-2019 அன்று, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பொருட்களை, பூசாரிகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் காட்சி பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
‘நம்ம பூசாரிகள்தானே!’ எனக் கருவறை தெய்வம் மன்னித்து அமைதி காத்தாலும், சிசிடிவி என்ற கண்கண்ட தெய்வம், திருட்டு பூசாரிகளை மாட்டிவிட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கோவில் அறங்காவலர் குழுவில் உள்ள பூசாரிகள் ராமர், கதிரேசன், அரிராம் ஆகிய மூவரும், கோவில் பூஜை மற்றும் விழாக்களின்போது பங்குபெற முடியாதபடி, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், வேறென்ன மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது’ என்று 68 வருடங்களுக்கு முன் கலைஞர் எழுதிய திரை வசனம், இன்றைக்கும் பொருந்திப் போவதென்பது, அந்த பராசக்திக்கே வெளிச்சம்!