திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என கட்சி பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதை தொடர்ந்து மாநில இளைஞரணி செயலாளராக இருக்கும் .
சாமிநாதனும் உதயநிதிக்கு இந்த பொறுப்பை நானே மனதார கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்களும் உதயநிதிக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் கொரடாவுமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் ஆகியோர் மாவட்ட ஆலோசனை கூட்டம் போட்டு "உதயநிதி ஸ்டாலின் மாநில இளைஞரணி செயலாளராக வரவேண்டும்"என ஏகமனதாக தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பியும் இருக்கிறார்கள்.
அதோடு கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமாரோ தனது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது... ஜூன் மாதத்திற்கு ஒரே ஒரு தேதிதான் அது மூன்றாம் தேதி. அது தானைத்தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் . மாதம் முழுவதுமான கொண்டாட்டம் கொடியேற்றம் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் என்று ஜூன் மாதத்தின் ஒவ்வொரு நாளும் மூன்றாம் தேதியாகத்தான் இருக்கும்.
ஆனால் இதுவரை நாம் கொண்டாடிக்கழித்த ஜூன் இது அல்ல, இது வேறு ஒரு ஜூன் நம் தலைவர் நம்முடன் இல்லாத முதல் ஜூன் 3 இது. அவர் இல்லை என்கிற நினைவே மனதை பிசைகிறது. ஆனால் தலைவர் கற்றுத்தந்த பாதையில், விரல் நீட்டிய திசையில், அவர் கொடுத்துள்ள அருட்கொடையாம் தலைவர் தளபதியின் சீரிய பாதையில், சரியாகவே பயணிக்கிறோம் என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவித்துள்ளது.
எங்களது இந்தியா தெற்கிலிருந்து தொடங்குகிகிறது என்பதை உலகுக்கு சொல்லுகிறது. நாம் வென்றுள்ள இடங்கள் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செயலை எங்கள் மாவட்ட கழகத்தின் சார்பில் செய்திருக்கிறோம்
.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் சுற்றிச்சுழன்ற சூறாவளியாய் தமிழகமெங்கும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். மக்கள் மொழியில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்றுத்தந்தது. அவரின் பிரச்சாரமும், பழகும் பண்பும் கழகத்தினர் மத்தியில் புது ரத்தம் பாய்ச்சியுள்ளது.
இப்படியான சூழலில் கழகத்தலைவர் தளபதியார் எப்படி இளைஞரணியை பொறுப்பேற்று கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றாரோ,அதைப் போல அண்ணன் உதயநிதி அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியின் தலைமைப் பொறுப்பினை கழகத்தலைவரின் அனுமதியோடு ஏற்க வேண்டும் என்று, திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்
.
அண்ணாவின் அன்பகத்திலிருந்து அண்ணன் உதயநிதி அடுத்த தலைமுறை இளைஞர்களுக்காக திமுகவினை கொண்டு செல்லும் பணியை விரைவில் துவக்கவேண்டும் என்பதே, இந்த ஜூன் மூன்றில் வரலாற்று நாயகர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் நான் வைக்கப்போகும் கோரிக்கையும் இது தான் என குறிபிட்டு இருக்கிறார் . அதை கண்டு மற்ற மாவட்ட செயலாளர்கள் கூட உதயநிதி ஸ்டாலின் தான் மாநில இளைஞரணி செயலாளராக வர வேண்டும் என தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பி வைத்தும் வருகிறார்கள் அதன் மூலம் கூடிய விரவில் உதயநிதியும் மாநில இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு ஏற்க இருக்கிறார். ஏற்கனவே முரசொலியை நிர்வகித்து வரும் உதயநிதி மாநில இளைஞர் அணி செயலாளராகவும் கழகத்தில் குதிக்க தயாராகி வருகிறார் .