திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துறையில் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் துணை சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக அவர்களின் வேண்டுகோளை ஏற்று ரூ. 20 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன் திறப்பு விழா பொன்னிமாந்துறையில் நடைபெற்றது. விழாவிற்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலம்தான் கிராம மக்களின் பொற்காலமாக உள்ளது. கலைஞர் முதல்வராக இருந்தபோது ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான பெரும்பாறையில் துணை சுகாதார நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல கிராமங்களில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதால் கிராம மக்கள் எளிதில் மருத்துவ வசதி பெரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சித் தலைவர் ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களும், கர்ப்பிணி பெண்களும் எளிதில் மருத்துவ வசதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.