கடலூர் மாவட்டம், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கத்தின் மூலம் நிலக்கரி வெட்டப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், என்.எல்.சி நிறுவனத்தில் அமைந்துள்ள இரண்டாவது நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் மண்ணானது, கன்வேயர் பெல்ட் மூலமாக வெளியே கொண்டுவர, ராட்சஷ மண் வெளியேற்றும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு சுரங்கத்தில் இருந்து மண்ணை வெளியேற்ற பயன்படுத்தப்படும் இயந்திரம் தவறுதலாக கையாளப்பட்டதால் தலைகீழாக சரிந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இயந்திரத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சிலர் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள, 2 ஆயிரம் டன் எடைகொண்ட ராட்சஷ மண் வெளியேற்றும் இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததால், சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மண் வெளியேற்றும் பணி பாதிக்கப்பட்டது.