இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “2 ஆயிரம் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ. 356 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் 2.2% மக்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னைக் கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும், ஏரிகள் சீரமைக்கப்படும். மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ. 5 கோடி ஒதுக்கீடு. அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ. 430 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நாமக்கல்லில் ரூ. 358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ. 3050 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.