தலை நிற்காத போதையில் இருசக்கர வாகனத்தில் சீருடையில் வந்த காவலர் விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிக்க முயன்ற நிலையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஊட்டியில் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் காபி ஹவுஸ் பகுதிக்கு அருகே உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மோதினார். முழு போதையில் இருந்த அந்த நபரை பொதுமக்கள் பிடித்தனர். பொதுமக்கள் பிடித்து விசாரித்தபோது அவர் காவலர் என்பது தெரிந்து அதிர்ந்தனர்.
காக்கி உடைக்கு மேலே ஸ்வெட்டர் அணிந்திருந்த அவர் உதகை நகர மத்திய காவல் நிலைய காவலர் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. அவருடைய பாக்கெட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும் இருந்தது. போதையில் நடக்க முடியாமல் இருந்த அவர் பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பித்து செல்ல முயன்ற நிலையில் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.