நீலகிரியில் கரோனா பாதித்த நால்வர் ஆம்புலன்சில் ஏற மறுத்ததோடு, தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்த சுகாதாரத் துறை பணியாளர்களை மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள மேஸ்திரிகுன்னு பகுதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்துச் செல்ல நகராட்சி ஊழியர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் அந்த இடத்திற்குச் சென்று, கரோனா பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்சில் ஏறும்படி கூறியுள்ளனர். ஆனால் நோயாளிகள் ஆம்புலன்சில் ஏற மறுத்ததோடு நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பணியாளர்களுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் சிலர் பேசிய நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கு நகராட்சி பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கரோனா நோயாளிகளை சமாதானப்படுத்தி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் நான்கு கரோனா நோயாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா நோயாளிகள் மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.