நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வேட்பாளர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தின் காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 'எங்களை மிரட்ட சொன்னார்களா?' என பேச தொடங்கிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், ''சவுண்ட் எல்லாம் விடாதீங்க. வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வச்சு விடுவேன்' என மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.