சென்னை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் சிவசங்கர் பாபா என்ற சாமியார் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2021 ஆம் ஆண்டு புகார்கள் எழுந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட பள்ளியிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டது.
இந்த வழக்குகளில் ஒரு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சிவசங்கர் பாபா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '2007 ஆம் ஆண்டு படித்த அந்த மாணவி 2021 ஆம் ஆண்டு காவல்துறைக்கு ஆன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார். தற்பொழுது அந்த மாணவி ஆஸ்திரேலியாவில் உள்ளார். மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்த நிலையில் புகார்தாரரின் உண்மைத் தன்மை பற்றிய அறிய வேண்டும். அதுவரை இந்த வழக்கில் விசாரணையை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
இந்நிலையில் புகார் அளித்த மாணவியை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சிவசங்கர் பாபா தரப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.