உலக செவிலியர்கள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மக்களின் உயிர்காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்துடன் ஈடுபடுபவர்கள் செவிலியர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் எனும் செவிலியர், போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளித்து தாய்மனதிற்குரிய பரிவுக் காட்டியவர். அவரைச் சிறப்பித்து, செவிலியர் அனைவரின் பணியையும் போற்றிடும் நாளாக இந்நன்னாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
கரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானதுதான். இதில் முன்கள வீரர்களாகக் கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியர்களின் நலன்களும், உரிமைகளும் காக்கப்படும் என்பதைத் தெரிவித்து, தன்னுயிர் கருதாது மன்னுயிர் காக்கும் செவிலியர்களை வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.