ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபொழுது தமிழ்நாட்டில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் தனிமையில் இருந்தபொழுது. அவரிடம் கலெக்ராக இருக்கிற உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன் செய்வீங்களா? என்று கேட்டிருக்கிறார். அய்யா நீங்க சொல்லி செய்யாமல் விடுவோமா சொல்லுங்கய்யா செய்றேன் என்று அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பணிவாக கூறியுள்ளார். தன் உறவினர்களுக்கு ஏதோ உதவி கேட்க போகிறார் என்ற எண்ணம் அந்த அதிகாரியிடம் இருந்தது..
ஆனால் கலாம் கூறியது, நீங்க நல்ல பொறுப்புல இருக்கீங்க.. அந்த பொறுப்பை பயன்படுத்தி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கனும், இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீர் இல்லாமல் போகப் போகுது அதை தடுக்கனும் அதற்கான நடவடிக்கை எடுக்கனும் என்று தனது கோரிக்கையை சொன்னார். இதைக் கேட்டு வியந்தார் அந்த ஆட்சியர். நாளை திட்டத்தை இப்போதே சிந்தித்திருக்கிறார் கலாம் என்று.. கலாம் அன்று சொன்னதைப்போல இன்று தண்ணீர் இல்லாத தமிழகம் உருவாகிவிட்டது. அவர் சொல்லி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கலாமின் கனவுகளை நினைவாக்க இன்றைய தமிழக இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு இளைஞர்களும் ஒரு பெரிய ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை ஒட்டங்காடு கிராமத்தில் நடந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தினத்தில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியர் பி.சிவகுரு பிரபாகரன், UPSC-2019 தேர்வில் வெற்றி பெற்ற தஞ்சையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுபாஷினி, ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குநர் மந்திராசலம், கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் மற்றும் புனல்வாசல் டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். அதனால் விழிப்புணர்வுடன் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது பள்ளி மாணவர்கள் ஒட்டங்காடு பெரியகுளம் ஏரி தூர்வாருவதற்காக தங்களது சிறுசேமிப்பு பணம் ரூ.8406 நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
பின்னர் ஒட்டங்காடு பெரியகுளத்தை தங்கள் சொந்த முயற்சியில், சொந்த செலவில் சீரமைக்கும் இளைஞர்கள், கிராமத்தினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.