கொங்குமண்டலத்தில் திமுகவின் சரிவை சரிகட்டுவதற்காக அதிமுகவின் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுகவில் இணைத்துக்கொண்டனர். திமுகவில் அவர் புயல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றார். கரூர் எம்.பி. தொகுதியில் ஸ்டாலின் யாரை நிறுத்துகிறாரோ அவரை வெற்றிபெற வைப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மக்களவைத் தோ்தலுக்காக திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், ‘’செந்தில் பாலாஜி கரூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். மக்களவை தொகுதிக்கு மட்டுமின்றி அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தோ்தலிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் உதயநிதிஸ்டாலினை வைத்து தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி அவரை ஆச்சரியப்பட வைத்தார். அப்போது உதயநிதி பேசும் போது , செந்தில்பாலாஜி போன்று ஒவ்வொரு தொகுதியிலும் செயல்பட்டால் கட்டாயம் 40 தொகுதியிலும் வெற்றிபெறுவோம் என்றார்.
கரூர் எம்.பி. தொகுதிக்கு திமுக சார்பில் கரூர் சின்னசாமி, கே.சி.பி. மகன் சிவராமன், நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட தி.மு.க. புள்ளிகள் வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு நாள் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலை குறிவைத்து நகர்த்தி கொண்டு இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது கரூர் எம்.பி. தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்து, ஏற்கனவே எம்.பி. கனவுகளோடு இருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.