சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியருக்கு சர்வதேச வேளாண் ஆய்வு மைய விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மிக வறட்சிப் பிரதேசங்களுக்கான ஆய்வு மையம் சார்பில் இந்த ஆண்டுக்கான தாவர அறிவியல் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்களிடம் நடைபெற்ற ஆய்வுப் போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் ராஜ்பிரவீன் வழங்கிய, "செயற்கை நுண்ணறிவு கொண்டு இயற்கை சீற்றங்களைக் கண்டறிவது பற்றிய ஆய்வுக் கட்டுரை சிறந்த ஆய்வாகக் கருதப்பட்டு சர்வதேச வேளாண் மைய சிறந்த ஆய்வுக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை சர்வதேச வேளாண் ஆய்வு மைய பொறுப்பு இயக்குநர் பீட்டர் கார்பெரி, சர்வதேச வேளாண் ஆய்வு மைய துணை இயக்குநர் கிரண்குமார் சர்மா ஆகியோர் வழங்கி பாராட்டினர். இந்த விருதைப் பெற்ற உதவி பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அப்போது, வேளாண்புல முதல்வர் தாணுநாதன் உடனிருந்தார்.