கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகி வருகிறது மணிமுத்தாறு. இந்த ஆற்றை தடுத்து சூளாங்குறிச்சி அருகே 'டேம்' கட்டப்பட்டுள்ளது. அது நிரம்பி வெளியேறும் நீர் மணிமுத்தாறாக ஓடிவருகிறது. அதேபோல் கல்வராயன் மலையில் உற்பத்தியாகி வரும் கோமுகி ஆற்றை கச்சராபாளையம் அருகே தடுத்து கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் கோமுகி ஆறாக ஓடிவந்து கடலூர் மாவட்டம் நல்லூர் அருகே ஒன்றாக இணைந்து மணிமுத்தாறு என்ற பெயரில் விருத்தாசலத்தைக் கடந்து கூடலையாற்றூர் என்ற இடத்தில் வெள்ளாற்றுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது.
சமீப நாட்களாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக மணிமுத்தாறு, கோமுகி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது. இந்த ஆற்றின் அருகே சங்கராபுரம் உள்ளது. இதன் அருகில் உள்ள ஊர் தும்பை. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது ஐயாசாமி. விவசாயியான இவர் மணிமுத்தாறு அருகில் உள்ள பாச்சேரிகிராமத்தில் விவசாய நிலம் வைத்துள்ளார். தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக அவர் விவசாய நிலத்தைப் பார்த்து வருவதற்காகச் சென்றுள்ளார். நிலத்தைப் பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்புவதற்காக மணிமுத்து ஆற்றைக் கடந்து வந்துள்ளார். அப்போது வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆற்றைக் கடக்கும்போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, வயல்வெளியில் வேலை செய்தவர்கள் காப்பாற்றுவதற்கு ஓடிச் சென்றனர். ஆனால் வெள்ள நீரின் வேகத்தால், அவரை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சங்கராபுரம் காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விவசாய அய்யாசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இன்றுவரை அவர் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் விடிந்ததும் அவரை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயி அய்யாசாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.