ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட தலமலை மலைப்பகுதியில் தடசலப்பட்டி, இட்டரை, மாவ நத்தம் ஆகிய கிராமங்களில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கடும் வயிற்றுப்போக்கு வாந்தியால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் இரண்டு பெண் உள்பட மூன்று பேர் சிகிச்சை மூலம் வீடு திரும்பினர்.
தாளவாடி ஒன்றிய மலைப்பகுதியில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். இதில் அந்த கிராமத்திற்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் குழாய் பழுதால் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாமல் இருந்தது. இதனை அடுத்து மழையால் தேங்கிய குட்டைகளிலும், நீர் நிலைகளிலும் தண்ணீரை குடித்ததால் ஒவ்வாமை மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராம பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குளோரினேஷன் செய்து குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் பெயரில் ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தல் பேரில் ஈரோடு மாநகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் உள்ள 64 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், 220 சின்டெக்ஸ் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை தூய்மை செய்திடவும், ஒவ்வொரு முறையும் நீரேற்றம் செய்யும்போது குளோரினேஷன் செய்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள், 225 கிராம ஊராட்சிகளிலும் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.