புதுச்சேரி எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான என்.ரங்கசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர், ’’கடந்த ஆட்சி காலத்தில் காரைக்கால் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் கிடைப்பதில் ஆர்வம் காட்டியுள்ளேன். இப்போதும் காரைக்கால் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் கிடைக்க வேண்டியது அவசியம்.
காவிரி நீரை பெற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு நமது பகுதிக்கு பெற வேண்டிய நீரை பெற வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ் கூறியுள்ளது. இதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். தங்களுடைய நிலைப்பாட்டை அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி நீர் கிடைக்க அனைத்து நடவடிக்கையிலும் உறுதியாக இருப்போம்.
ஆளுகின்ற புதுச்சேரி காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் சென்று தேவையான அழுத்தத்தை கொடுக்கவில்லை என நினைக்கின்றேன். ஆனால் கர்நாடக அரசு அதனை செய்கிறது. பிறரை குறை கூறும் செயலையே ஆளும் காங்கிரஸ் அரசு செய்து வருகின்றது. உரிய காவிரி நதிநீரை பெற காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதுவே என்.ஆர்.காங்கிரஸ் எண்ணம். காரைக்கால் விவசாயிகளுக்கு காவிரி நீர் மிக முக்கியம்.
காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.
நேற்று பிரதமர் மோடி விழாவை புறக்கணித்ததாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆனால் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியிருக்க வேண்டும் என்பதே என்.ஆர்.காங்கிரஸ் எண்ணமாக உள்ளது.
தமிழகத்தில் இராணுவ தொழிற்சாலை அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தது போல் புதுச்சேரி மாநிலத்திற்கு தொழிற்சாலைகள் வருவதற்கும் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியிருக்கலாம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர் நேரம் அளிக்கும் போது சந்திப்பேன்.’’