“இறந்த தாயின் உடலை சைக்கிளில் 18கி.மீ எடுத்துச் சென்ற மகன் - திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலை, அவரது மகன் சைக்கிளில் 18 கிலோ மீட்டர் எடுத்துச் சென்றிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டதே அந்த மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த வேண்டிய மருத்துவர்களே, எதாவது காரணத்தை கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது மனிதநேயமற்ற செயலாகும்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்கள் இனியும் தொடராத வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதுமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.